×

கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் வீடு வீடாக விநியோகம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பக்கட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகைக்கான டோக்கன் வீடு, வீடாக வழங்கும் பணி நேற்று தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக பாதிக்கப்பட்ட தாலுகாக்களுக்கு ரூ.6,000, பிற தாலுகாக்களுக்கு ரூ.1,000 வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார். இந்த வெள்ள நிவாரணத் தொகையை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடைகள் மூலம் வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகிக்கும் பணி நெல்லையில் நேற்று தொடங்கியது.

பாளையங்கோட்டை, நெல்லை, சேரன்மாதேவி தாலுகாக்களில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், அம்பை தாலுகாவில் 16 கிராமங்கள், ராதாபுரம் தாலுகாவில் 12 கிராமங்கள், நாங்குநேரி தாலுகாவில் 30 கிராமங்கள், மானூர் தாலுகாவில் 17 கிராமங்கள், திசையன்விளை தாலுகாவில் 11 கிராமங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. 5 தாலுகாவில் உள்ள மற்ற கிராமங்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 542 ரேஷன் கார்டுகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

இதற்கான டோக்கன் வீடு, வீடாக சென்று 796 ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் விநியோகிக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவை, திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 5 தாலுகாக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாகவும், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தார் ஆகிய தாலுகாக்களில் குறைந்தளவு பாதிப்பு உள்ள பகுதியாகவும் கருதப்படுகிறது. அதிக பாதிப்புள்ள பகுதிகளில் 185 வருவாய் கிராமங்களும், 508 ரேஷன் கடைகளும், 3 லட்சத்து 21 ஆயிரத்து 53 ரேஷன் கார்டுகளும் உள்ளன.

இதேபோல் குறைந்த பாதிப்புள்ள பகுதிகளில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 614 குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன்களை வழங்கி வருகின்றனர். புதிதாக அச்சிட்டு விநியோகிக்க தயாராக உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்டுகள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே நேரில் வந்து டோக்கன்களை விநியோகிக்கின்றனர். இதேபோல் குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 5 லட்சத்து 77 ஆயிரத்து 760 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000க்கான டோக்கன் வழங்கும் பணி ரேஷன் கடைகளில் நேற்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து இன்றும், நாளையும் டோக்கன் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். 29ம் தேதி காலை முதல் அரசின் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம், ரூ.ஆயிரம் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் வீடு வீடாக விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...